80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சார்ந்தவர்கள் சீனிவாசன்(20) மற்றும் விக்னேஷ் (23). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் சீனிவாசன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மூதாட்டியின் வாக்குமூலம் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் விசாரித்த நீதிபதி நேற்று இறுதி கட்ட விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளிகளான சீனிவாசன் மற்றும் விக்னேஷ் மீதான குற்றங்கள் எந்தவித சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சேலம் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.