காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் 1,000-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையை கண்டித்து, அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த 14 நாட்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், திடீரென காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் பந்தல்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், 3 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு அறிவித்தது. ஏற்கனவே, சாம்சங் நிறுவனத்துடன் தொழிலாளர் நல ஆணைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் சுமூக தீர்வு எட்டப்படாததால், தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறனர்.
தற்போது, காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அதில், சங்கம் சார்பில் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும் இல்லையெனில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு, தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read More : சேலத்தில் அதிர்ச்சி..!! பெற்ற 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை..!! மனைவி, மற்றொரு குழந்தை கவலைக்கிடம்..!!