ஏஐ கேமரா தொழிற்நுட்பத்தை போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுத்துவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், இத்தகைய அதிநவீன தொழிற்நுட்பம் பயன்படுத்துவதை தடுக்க முடியாது என கூறியதோடு, கேரள மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஏஐ என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவை பெற்ற தொழிற்நுட்பங்கள் உலகில் பல்வேறு துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன. ஏஐ சார்ந்த படிப்புகளை படிக்கவும், பயிற்சிகளை பெறவும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆட்டோமொபைல் வாகனங்களில் கூட செயற்கை நுண்ணறிவு பெற்ற வாய்ஸ் கமெண்ட்ஸ் வசதி உள்ளிட்டவை இடம்பெற ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக, ஏஐ கேமராக்கள் வேகமாக உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. இத்தகைய ஏஐ கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் முயற்சியாக, கேரள மாநில அரசு ‘சேஃப் கேரளா திட்டம்’ என்கிற திட்டத்தை அமல்படுத்த தயாராகியது. ஆனால், ஏஐ கேமராக்கள் மூலம் ஆதாரமின்றி வாகன ஓட்டிகள் மீது குற்றம் சுமத்தி அபராதம் விதிக்கப்படுவதாக கேரள எதிர்கட்சி தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான வி டி சதீஷன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாநில எதிர்கட்சியின் இந்த வழக்கை சில தினங்களுக்கு முன் விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏஐ கேமராக்கள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆளும் மாநில கட்சிக்கும், கேரள போலீஸாருக்கும் சாதகமான உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. கேரள மாநில அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்வதை விட, இந்த வழக்கில் மாநில அரசை வெகுவாக உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்கு ஏஐ கேமரா ஓர் சிறந்த கண்டுப்பிடிப்பு என்பதை உணர்ந்துள்ள கேரள உயர்நீதிமன்றம், கேரள மாநில அரசாங்கமும், மோட்டார் வாகன துறையும் இந்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
ஊழல் பிரச்சனைகள் இருப்பதால் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது. ஏஐ கேமராக்கள் பொருத்தப்படுவதை எதிர்கட்சிக்கள் கூட விமர்ச்சிக்கவில்லை என தீர்ப்பின்போது தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த திட்டத்தில் நடக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை தனியாக பார்ப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஏஐ கேமரா திட்டத்தில் கேமராக்களை பொருத்துவதற்காக ஒப்பந்த நிறுவனத்திற்கு கேரள அரசு பணம் வழங்குவதை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்ததோடு, இந்த பணம் வழங்கல் விஷயத்தில் மாற்று வழியை கூறியுள்ளது. இந்த காரணங்களுக்காக ஓர் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்பை நிராகரிக்க முடியாது என்பதுபோல் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.