விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கடவுளுக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்தால், இந்த பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவரே கடவுளுக்கு விளக்கி விடுவார் என்றும் அவர் விளக்குவதை கேட்டு கடவுளே குழம்பி விடுவார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
மேலும் பாஜக அரசு மக்களை அச்சுறுத்துவதாகவும், விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார். வன்மம், கோபம், வெறுப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே பாஜகவின் கூட்டத்தில் அமர முடியும் என்று விமர்சித்தார். பாரத ஒற்றுமை யாத்திரையை நிறுத்தச் செய்வதற்காக பாஜக அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை என ராகுல்காந்தி தெரிவித்தார்.