ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்த்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரி மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உ உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2023- 2024 ஆம் கல்வியாண்டில் இக்கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்த்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் ஆதார், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சாதிச்சான்று மற்றும் வருமான சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம் இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியாக இல்லை என்றால் சரியான விவரங்களை திருத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். மேலும் ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிறதா? என்ற விவரத்தினை உறுதிப்படுத்த http://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய முகவரியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.