சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
அந்த வகையில், தற்போது சேலம் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில், ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில், நாகர்கோவிலை சேர்ந்த 50 வயதான பிரான்சிஸ் ஆண்டனி என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு அதே பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமி மீது ஆசை இருந்துள்ளது. இதையடுத்து, அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமையாசிரியர் கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் போலீசார், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.