தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வேலாயுதபுரம் பகுதியில் 36 வயதான பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இரவு நேரம் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது, 10ம் வகுப்பு மாணவன் ஒருவருக்கு, பணியில் இருந்த ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், தனது வீட்டிற்க்கு சென்றதும் நடந்த சம்பவத்தை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருண் பிரசாத், பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர் பிரான்சிஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் புலம்பி வந்த நிலையில், தற்போது ஆண் பிள்ளைகளுக்கும் பள்ளியில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.