திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு, சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர்.
ஆனால், சீமானின் மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பெயரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சம்மனை கிழித்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை தள்ளிவிட்ட சீமானின் காவலாளி அமல்ராஜ் என்பவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆஜராக உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்நிலையம் வருமாறு கட்சி தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால், வளசரவாக்கம் காவல்நிலையம் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை வந்த சீமான் வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். அங்கு தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இந்த ஆலோசனையில், இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது, எப்படியான கேள்விகளுக்கு எப்படியான பதில்கள் அளிக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறையினர் 300 கேள்விகளைக் கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more:கல்லூரி படிக்கும் பெண்ணை விருப்பம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தேனா..? – சீமான் சர்ச்சை பேச்சு