கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கும், சந்தையில் கோதுமை எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லரை வர்த்தக விற்பனையாளர்கள் மற்றும் கோதுமை பதப்படுத்துபவர்களுக்கு கோதுமை கையிருப்புத் தொடர்பான வரம்புகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி, பதுக்கலைத் தடுத்து விலையை கட்டுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வர்த்தகர்களிடம் கோதுமை இருப்பு குறித்த விவரங்களைப் பெறுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணையதளமான https://evegoils.nic.in/wsp/login என்ற தளத்தில் தரவுகளை நிரப்புவதற்கான வழிமுறைகள் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோதுமை கையிருப்பு வரம்புகளுக்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமையின் கையிருப்பு நிலையை இந்த இணையதளத்தில் தவறாமல் அறிவித்து புதுப்பிப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.