இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் விமானத்திற்கு உண்டு. ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால், ஏர் இந்தியா ஒன் விமானம் தொடர்ச்சியாக 17 மணி நேரம் பறக்க கூடியது. இந்திய விமான படையை (Indian Air Force) சேர்ந்த பைலட்கள்தான், ஏர் இந்தியா ஒன் விமானத்தை இயக்குகின்றனர். ஏர் இந்தியா ஒன் விமானத்தை இயக்குவதற்காக அவர்களுக்கு பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், சிறப்பு கூட்டங்களை நடத்துவதற்கான தனி அறை இருக்கிறது.
மேலும் விவிஐபி பயணிகளுக்கான கேபின் மற்றும் மருத்துவ மையம் போன்ற வசதிகளும், ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இருக்கின்றன. அத்துடன் ஏர் இந்தியா ஒன் விமானத்தில், அட்வான்ஸ்டு கம்யூனிகேஷன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நடுவானிலேயே ஆடியோ மற்றும் வீடியோ கால்களை பேசி கொள்ள முடியும். இந்த உரையாடலை யாராலும் ‘ஹேக்’ செய்ய முடியாது என்பதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சமே. SPS எனப்படும் Self-Protection Suits உடன் வரும் முதல் இந்தியா விமானமும் இதுவே. எதிரிகளின் ரேடார் சிக்னல்களை முறியடிக்கும் திறன் இதற்கு உண்டு. அத்துடன் அருகில் ஏதேனும் ஏவுகணைகள் வந்தால், அவற்றின் திசையை மாற்றி அமைக்க கூடிய வல்லமையையும் இது பெற்றுள்ளது.
எனவே ஏவுகணைகளால் இந்த விமானத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. அமெரிக்க அதிபராக யார் பதவியேற்றாலும், ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தை பயன்படுத்துவார்கள். அந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு வசதிகளை, ஏர் இந்தியா ஒன் விமானமும் பெற்றுள்ளது. இந்திய பிரதமர் மட்டுமல்லாது, குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் என நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பான பயணத்தையும் மனதில் வைத்துதான், ஏர் இந்தியா ஒன் விமானம் மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் போன்றவர்கள் மிகவும் உயரிய பொறுப்புகளில் இருப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே அவர்களின் பயணங்களுக்கு, ஏர் இந்தியா ஒன் போன்ற பாதுகாப்பான விமானங்கள் தேவைதான். ஒரு சிலர் விமர்சிப்பதை போல், இதை ஆடம்பரம் என கூறுவது மிகவும் தவறான விஷயம்.