நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேசிய அவர்; உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை கடற்படை தாக்க வரும்போது தடுத்து, இதுவரை ஒரே ஒரு தமிழ் மீனவரை கூடக் காப்பாற்றாதது ஏன்..? உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கை பார்க்குமா..? இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை..?
குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ.நா.மன்றம் வரை அபாய மணியடிக்கும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன்..?
மெரினா கடற்கரை தான் இந்திய நாட்டிலே இந்த நாட்டை ஆண்ட பிரதமர் யாராவது கடற்கரையில் கல்லறை கட்டி படுத்திருக்கிறார்களா..? இந்திய நாட்டிலே மொத்தம் எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் யாராவது கடற்கரையில் கல்லறை அமைத்து இருக்கிறார்களா. நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று ஆளாளுக்கு இரண்டு இரண்டு ஏக்கரில் சமாதி கட்டி படித்திருக்கிறீர்கள்.
எங்களை எல்லாம் சுடுகாட்டில் போட்டுவிட்டு நாட்டையே சுடுகாடாய் ஆக்கிவிட்டு நீங்கள் கடற்கரையில் குதூகலமாக படுத்து இருக்கிறீர்கள். மீனவர்கள் எல்லாம் பேரை பேராசைப்பட்டு எல்லை தாண்டி போனார்கள் என்கிறார்கள் நீங்கள் எதற்கு அங்கே படுத்திருக்கிறீர்கள். இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நான் கேட்பேன். நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என்று ஆவேசமாக கூறினார்.