வடக்கு டெல்லியில் அமைந்துள்ளது சுப்ஸி மண்டி. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் இந்து. இவருடன் இவரது மகன் தீபக் வசித்து வருகிறார். தீபக்கிற்கு சாரு மற்றும் ஹீனா என்ற சகோதரிகளும், ஒரு மூத்த சகோதரரும் உள்ளனர். மூத்த மகன் மோஹித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். சாரு மற்றும் ஹீனா ஆகியோருக்கு திருமணம் ஆகி தங்களது கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.
சாரு வழக்கமாக தீபக்கிற்கு வீடியோ கால் செய்து தனது தாயை நலம் விசாரிப்பது வழக்கம். வழக்கம்போல கடந்த திங்கள்கிழமை இரவு தீபக்கின் போனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, தீபக் வீடியோ காலில் பேசும்போது அவரது தாயார் சுய நினைவற்ற நிலையில் இருந்துள்ளார். தீபக்கிடம் இதுதொடர்பாக கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
உடனடியாக தனது தங்கை ஹீனா மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்துவிட்டு அங்கு சென்று பார்த்தபோது முகம், வாய் ஆகிய பகுதிகளில் காயங்களுடன் ரத்தம் வழிந்தோடிய நிலையில் இந்து சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீபக்கிடம் இதுதொடர்பாக கேட்டபோது இந்து கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்ததாக கூறியுள்ளார். அவரது பேச்சு நம்பும் விதத்தில் இல்லாததால், காவல்துறையை அழைக்கப்போவதாக சாரு கூறியுள்ளார். உடனே, தீபக் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீபக்கை தேடிக்கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. தீபக்கிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்த தீபக்குடன் வாழ முடியாமல் அவரது மனைவி இவரை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார். எந்த வேலைக்கும் செல்லாமல் வாழ்ந்து வந்த தீபக், தனது தாயாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஷோரா கோதியில் உள்ள வீட்டை விற்குமாறு அவரது தாயாரை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தீபக் தனது தாய் என்றும் பார்க்காமல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரது தாய் இந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியானது.