Bomb blast: இஸ்ரேலில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இஸ்ரேலின் Bat Yam பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளிலேயே வெடிகுண்டு வெடித்துள்ளது. இதுவரை உயிர் அபாயம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, நான்கு முதல் ஐந்து கிலோகிராம் வரை எடையுள்ள வெடிக்கும் சாதனங்கள் பேருந்துகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இவை நாளை காலை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வெடிகுண்டிலும் வெடிக்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகையில், இது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளை இறுதிவரை வேட்டையாடுவோம், முகாம்களில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.