வெளிநாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்திய பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்கும் வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுகளுக்கு மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்திய பெண்களுக்கான 9 ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்கும் வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுகளுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா (ஜெட்டா,ரியாத்) ஆகிய நாடுகளில் 7 இடங்களில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கவும், டோரண்டோ, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இல்லாமலும் இந்த ஒருங்கிணைந்த சேவை மையங்கள் உருவாக்கப்படும்.
இந்த 9 இடங்களுக்குமான பட்ஜெட்டுக்கு வெளியுறவு அமைச்சகம் தற்போது ஏற்பாடு செய்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கான செலவுகளை எதிர்கொள்ள அனைத்து வெளிநாட்டு இந்திய தூதரங்களிலும் இந்திய சமுதாய நலநிதி என்ற தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கான விதிமுறைகள் 2017 செப்டம்பர் 1-ம் தேதி விரிவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியை சந்திக்கும் வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினருக்கு உதவுதல், சமுதாய நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தூதரக சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த விதிகளில் இடம் பெற்றுள்ளன.