கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..
இந்தியாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையை நீக்க பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.. எனினும் இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை..
இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராமதேஸ் அத்வாலே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. 2018-2022 காலக்கட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 308 பேர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்..
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதன் மூலம் கழிவுநீர் தொட்டியை சுத்தம்செய்த போது உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 46 பேரும், ஹரியானாவில் 40 பேரும், மகாராஷ்டிராவில் 38 பேரும் டெல்லியில் 33 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்..