தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் கோரிமேடு சின்ன கொல்லபட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது வளர்ப்பு தந்தை மற்றும் வீட்டில் வசிக்கும் மற்றொரு நபர் பொதுத்தேர்வுக்கு படிக்க விடாமல், இரவு நேரங்களில் குடிபோதையில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த சிறுமி, ”நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அதிமுக பிரமுகர் சண்முகம் தத்து எடுத்தார். தத்து எடுத்த நாள் முதல் சரிவர உணவு வழங்காமல் அவ்வப்போது திட்டி வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு காலமாக வளர்ப்பு தந்தையான சண்முகம் வீட்டில் குடியிருக்கும் மணி என்பவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசியும், பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து தாய் கேட்க சென்றாள் தாயையும் மிரட்டுகிறார்கள். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில் எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொல்லை கொடுப்பதால், என்னால் சரிவர படிக்க முடியாமல் போகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வசிப்பதற்கும் படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.