ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு விதமான கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஃரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் ஒழுங்கான முறையில் அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஈரானில் செயல்பட்டு வந்த மத அறநெறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்தக் காவலர்கள் தாக்கியதில் கோமாவிற்கு சென்ற இவர் செப்டம்பர் 16ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உலகெங்கிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏராளமான போராட்டங்கள் ஈரானில் நடைபெற்றன. ஈரானில் செயல்பட்டு வந்த அறநெறி காவல்துறையினருக்கு மக்களிடத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை கலைத்தது ஈரான் அரசு. எனினும் இந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களில் சிறுவர் சிறுமிகள் என பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 12 வயது சிறார்கள் முதல் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களின் மீது ஈரானின் உணவு அமைப்பு மற்றும் காவலர்கள் பாலியல் வன்கொடுமை முதல் பல வகையான வன்கொடுமைகளை பிரயோகித்து உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அறிக்கையில் இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 19 பேரிடம் நேரடி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறது. இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான செயல்களுக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஈரானில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஈரானின் தலைவரான ஆயத்துல்லா அலி கொமேனி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு கொடுமைப்படுத்தியேனும் அவர்களிடமிருந்து உண்மையை அரிய விசாரணை செய்யுங்கள் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.