எத்தனையோ திரை நட்சத்திரங்களின் போராட்ட கதைகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். சினிமா மட்டுமல்ல எந்த துறையாக அதில் போராட்டம் இல்லாமல் வெற்றி கிடைக்காது. கடினமான காலங்களை நம்மில் பலரும் நிச்சயம் கடந்து வந்திருப்போம்.
பள்ளிக் கல்விக்கு பணம் இல்லாமல் சரியான கல்வியை பெறாத எத்தனையோ பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று டாப் நடிகையாக இருக்கும் ஒருவருக்கும் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. இந்த நடிகையின் குழந்தைப் பருவத்திலும் கடினமான காலம் இருந்தது. ஆம். இந்த நடிகைக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாது என்று அவர் தந்தை கூறிவிட்டாராம்.
ஆனால் இன்று தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகையாக அவர் மாறி உள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை சமந்தா தான். திரைப்படங்கள் மட்டுமின்றி, OTT தளங்களிலும் தற்போது சமந்தா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இன்று டாப் நடிகையாக இருக்கும் சமந்தாவின் தந்தையால் அவரின் கல்வியை செலவு செய்ய முடியாத ஒரு காலம் இருந்தது. தங்களிடம் இருந்த பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க நடிப்புட் துறையை தேர்ந்தெடுத்ததாக சமந்தாவே ஒருமுறை கூறியிருந்தார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய அவர், தனது கடனை திருப்பிச் செலுத்த தந்தை மறுத்ததாகவும், கல்லூரிக்கு செல்ல தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியிருந்தார். தனது செலவை சமாளிக்கவே நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்ததாகவும், தனது அந்த முடிவு தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் சமந்தா கூறியிருந்தார்.
கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சமந்தா பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் சமந்தாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது நான் ஈ படம் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவான இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. தொடர்ந்து கத்தி, தெறி, மெர்சல், யூட்டர்ன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா மாறினார்.
சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான Citadel: Honey Bunny என்ற வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ள சமந்தா இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். Citadel வெப் சீரிஸுக்கு அவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர் OTT இல் அதிக சம்பளம் நடிகையாக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மனோஜ் பாஜ்பாய் உடன் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸிலும் சமந்தா நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் மற்றொரு வெப் சீரிஸில் நடிக்க சமந்தா கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.