விழுப்புரம் மாவட்டம் தென் பொன் பரப்பி என்னும் ஊரில் அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் நந்தி சிலையானது தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் தரிசனம் செய்யும் போது நேராக நின்று பார்த்தால் சிவன் சிலை தெரியாது. ஆனால் இந்த கோயிலில் பால நந்தியாக சிலை அமைக்கப்பட்டிருப்பதால் கொம்புகளின் இடையூறு இல்லாமல் பிரதோஷ நேரங்களில் நேரடியாக நாம் சிவ தரிசனம் செய்யலாம்.
இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் ஆறுமுகம் வடிவத்தில் முருகன் சிலை சுமார் 8 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு முருகன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் துவார பாலகர்களுக்கு பதிலாக இரண்டு லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் நாள் அன்று காலை 6 மணி முதல் 7.30 வரை பாலநந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையே சூரிய ஒளி புகுந்து இரு கோடுகளாக பிரிந்து கர்ப்பகிரகத்தில் இருக்கும் சிவலிங்கத்தில் மேல் விழுவதைக் காணலாம். இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் கருவறையானது மிகவும் உக்கிரமாக இருக்கும் என காகபுஜண்டர் தனது நாடிச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் ராகு காலத்தில் தேன், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு ,எலுமிச்சம் பழச்சாறு, பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்கள் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. அப்போது லிங்கத்தின் உச்சியில் ஆரம்பித்து 16 கோடுகள் வழியாக அடிபாகம் வரை பீடத்தில் அபிஷேகம் ஐக்கியமாவதை நாம் காணலாம்.
Read more: படுக்கையறையிலிருந்து இவற்றை நீக்கினால்.. உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்..!! வாஸ்து சொல்றத கேளுங்க..