Surat: குஜராத்தில் குளிர்காய்வதற்காக தீமூட்டியபோது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்ததில் 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதோடு, கனமழை, அதிக காற்று, புயல் என மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்தநிலையில், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் பாலி கிராமத்தில் வசிக்கும் ஐந்து சிறுமியர், நேற்று முன்தினம் இரவு ஒன்றுகூடி விளையாடி உள்ளனர்.
அப்போது அங்கு குளிர் அதிகம் நிலவியதால், குப்பைக்கழிவுகளை திரட்டி தீ மூட்டி, அவர்கள் ஐந்து பேரும் குளிர்காய துவங்கினர். அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுமியரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து, சிகிச்சை பலனின்றி துர்கா, 12, அமிதா, 14, அனிதா, 8, ஆகிய மூன்று சிறுமியர் உயிரிழந்தனர். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர் காய்வதற்காக தீ மூட்டிய குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்ததால் மூவரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.