Earthquake: லடாக்கின் கார்கிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
லடாக்கின் கார்கிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.50 மணிக்கு 15 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பல பயனர்கள் சமூக ஊடகங்களில், நிலநடுக்கம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.76 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம்-IV இல் அமைந்துள்ளன, அதாவது அவை பூகம்பங்களால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் உள்ளன. டெக்டோனிகல் ரீதியாக செயல்படும் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லே மற்றும் லடாக் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகின்றன.
நில அதிர்வு, கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிராந்தியத்தின் டெக்டோனிக் அமைப்பு தொடர்பான அறிவியல் உள்ளீடுகளின் அடிப்படையில் நாட்டின் பூகம்ப பாதிப்புக்குள்ளான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) நாட்டை நான்கு நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது.
அதாவது மண்டலங்கள் V, IV, III மற்றும் II. மண்டலம் V மிக உயர்ந்த அளவிலான நில அதிர்வை எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் மண்டலம் II மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வுடன் தொடர்புடையது. கடந்த மாதம், பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலையில் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, குவஹாத்தி மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.