மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இறந்து போன நபர் ஒருவர் வெற்றி பெற்றதால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
தியோரி தாலுகாவில் உள்ள கஜேரா கிராமத்தில் உள்ள சர்பஞ்ச் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ரவீந்திர தாகூர் ஜூன் 22 அன்று மாரடைப்பால் இறந்தார், ஆனால் ஜூலை 1 வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டில் அவரது பெயர் தொடர்ந்து வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தீபக் ஆர்யா இதுகுறித்து பேசிய போது “தேர்தலுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு வேட்பாளர் இறந்தது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தால், நாங்கள் புதிய வாக்குச்சீட்டுகளை அச்சிடுகிறோம்..
ஆனால் வேட்பாளர் இறந்தது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.. எனவே அவரின் பெயர் நீக்கப்படாமல் இருந்துள்ளது.. “நாங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்டுள்ளோம். ஜூலை 14-ம் தேதி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் பிரச்சினை தீர்க்கப்படும்..” என்று தெரிவித்தார்..
இந்த கிராமத்தில் 1,296 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 1,043 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர்களான தாக்கூர் 512 வாக்குகளையும், சந்திரபான் அஹிர்வார் மற்றும் வினோத் சிங் முறையே 257 மற்றும் 153 வாக்குகளையும் பெற்றனர், இறந்த நபர் 255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.