திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்றுக் கொண்டு, உதவிகளை வழங்கியிருக்கிறார்.
அப்போது திடீரென்று சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண் முன்னே மைதானத்தில், ஒரு பெண் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை கவனித்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஓடிச் சென்று, அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல், தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு, ஆட்டோவில் ஏற்றி, அந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண் என்பதும், கந்துவட்டியின் கொடுமை காரணமாக, அவர் தீக்குளிக்க முயற்சி செய்தார் என்பதும் தெரிய வந்தது.
இதைக் கேட்ட காவல்துறையினர், அவரை கந்து வட்டி கேட்டு, கொடுமை செய்த சேலினா மற்றும் கிளாடிஸ் உள்ளிட்ட இருவர் மீதும், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அவர்களிடம் வேளாங்கண்ணி வழங்கியிருந்த காசோலைகள் உள்ளிட்டவற்றை மீட்டு, தருவோம் என்று காவல் துறையினர் உறுதி அளித்தனர்.
அரசு நிகழ்வு ஒன்றில், சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமையின் காரணமாக, ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம், திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.