கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் BF.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடியதால் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர், நகரங்களில் வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால், வரும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் BF.7 வகை வைரஸ் அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா BF.7 இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக, குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்ட பரிசோதனையில் ஒருவருக்கு BF.7 வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, குஜராத்தில் மற்றொருவர், ஒடிசாவில் இருவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் குணமடைந்துவிட்டனர். இதுவரை 4 பேருக்கு மட்டுமே BF.7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BF.7 என்பது ஓமிக்ரான் மாறுபாடு BA.5 இன் துணைப் வகையாம். இது அதி வேகத்தில் பரவக்கூடியது. ஆனால் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கண்டறிப்பட்ட இவ்வகை கொரோனா அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை என கூறப்பட்டுள்ளது. எனவே பிற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கொரோனாவின் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் BF.7 வகை வைரஸ் இந்தியாவில் அக்டோபர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.