தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கவும், ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விவரங்களைக் கொண்ட பலகையைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்புப் பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். வேலை நேரம், இன்றியமையா பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை, தகவல் பலகையில் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.