கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பயணிக்க ஏதுவாக ரூ.1 கோடி மதிப்புள்ள காரை அம்மாநில அரசு வாங்கியுள்ளது.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா 2013 – 2018 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யாரென்றே சொல்லாமல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் களம் கண்டது. அதில் 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறிவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ தனிப்பெரும்பான்மையை பெற்று இமாலய வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் யார் என்பதில் போட்டி இருந்தது. சித்தராமையாவா இல்லை டி.கே.சிவக்குமாரா..? இதையடுத்து இருவரும் தனித்தனியே சோனியாவையும் ராகுலையும் சந்தித்தனர்.
இந்த நிலையில் இருவரையும் ராகுல் காந்தி சமாதானம் செய்தார். முதலில் 30 மாதங்கள் வரை சித்தராமையா முதல்வராக இருப்பார். அடுத்த 30 மாதங்களுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக இருப்பார். மேலும் துணை முதல்வர் பதவியும் டி.கே.வுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நலனுக்காக இந்த ஆஃபரை ஒப்புக் கொண்டதாக சிவக்குமார் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஆஃபரில் டி.கே. சிவக்குமாரின் சகோதரருக்குத்தான் சற்று வருத்தம் இருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் நடந்தது. இந்த பதவியேற்பு விழாவுக்கு முன்பே முதல்வராக வருவோருக்கு எந்த காரை வாங்கலாம் என்ற பேச்சுவார்த்தை எழுந்தது. 33 ஆவது முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவர் டெல்லியிலிருந்து பெங்களூர் திரும்பி வந்த போது விமான நிலையத்திலிருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மெர்சிடிஸ் ஜி வேகன் எஸ்யூவி காரில் சென்றார். இந்த காரின் விலை ரூ.1.72 கோடி முதல் 2.55 கோடி ஆரும். இந்த காரில் நவீன அம்சங்கள் உள்ளன. இதில் சக்திவாய்ந்த என்ஜீன் உள்ளது.
சித்தராமையாவுக்கு ஏற்கெனவே மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா லாண்ட் குரூசர் போன்றவை பரிசாக கிடைத்துள்ளன. இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவுக்காக அந்த மாநில அரசு டொயோட்டா வெல்ஃபயர் காரை வாங்கியுள்ளது. ரூ 1 கோடி மதிப்பிலான இந்த காரில் லெதரினால் ஆன சீட்டுகள் உள்ளன. கால் வைக்கும் இடத்தை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இரட்டை சன் ரூப்கள் உள்ளன. 3 அடுக்குகள் கொண்ட பருவநிலை கட்டுப்பாடுகள் உள்ளன.
10 இன்ச் டச் ஸ்கீரின் கொண்ட இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த காரில் 7 ஏர் பேக்குகள் உள்ளன. அதிக வேகம் சென்றால் எச்சரிக்கும் கருவி உள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை உள்ளன. இது 7 சீட்டர் காராகும். ஸ்டைடு டோக் உள்ளது. இந்த கார் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கியதாக சொல்லப்படுகிறது. இனி இந்த காரில்தான் சித்தராமையா வலம் வருவார்.