224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்று 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகள் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் அங்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவிவருகிறது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் சிவகுமாரைத் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இந்நிலையில், இன்று ராகுல் காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, முதல் மந்திரி விவகாரத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இன்று அதற்கு பதில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவருக்கும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக பதவி வகிப்பார் அப்போது டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார், பின்னர் டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சித்தராமையா முதலமைச்சராக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கண்டிரவா மைதானத்தில் பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த முதல்வர் சித்தராமையாதான் என உறுதி செய்யப்படுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள சித்தராமையா இல்லம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.