fbpx

சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக!… பொய்களை கூறி மக்களை திசை திருப்புவதை நிறுத்துங்கள்!… அண்ணாமலை!

சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றுவதற்கு தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியதோடு, தமிழக அரசின் உரையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், உண்மை மற்றும் தார்மீக அடிப்படையில் இந்த உரையை வாசிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தார். அதன்பின், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிய அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள் உள்ளதாகவும், தமிழக மக்களை திசை திருப்புவதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரையைப் புறக்கணித்துப் பேசியதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், திமுக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் 10 பொய்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. குறிப்பாக, வெள்ள பாதிப்பை திமுக அரசு முறையாக கையாளவில்லை என்றும் ஆனால், இயற்கை பேரிடர்களை அரசு திறம்பட கையாண்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல் ஆளுநர் உரையில் உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால், சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருந்தனர். பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர் பாபு. அதன் பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன.

மழைக்கு முன்பு, 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் திரு. கே.என். நேரு, சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவுபெற்றதாக கூறினார். 99 சதவீத பணிகள் நிறைவடைந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிக்ஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டது தான் மிச்சம். இது போதாது என்று, தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது இந்தி கூட்டணி கூட்டத்திற்கு புதுதில்லி சென்றவர் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். இது தான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா ? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Kokila

Next Post

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Feb 13 , 2024
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு […]

You May Like