சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது.
அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக எளிதாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் சிலரை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய நபரை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னர் சிவகாசி நகர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது அந்த மாணவர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த மாணவரிடம் விசாரித்த போது மாணவர்கள் குழுவாக போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகளில் காவல்துறையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.