அரசு பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் 6-ம் தேதி வரை ஸ்லாஸ் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்தில் இருந்து வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்தாள்கள், ஓஎம்ஆர் விடைத்தாள்களை பெற்று வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.