வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண். வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட முடியாத சூழ்நிலை இருந்தது.
சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை அரசு செயல்படுத்த உள்ளது.
விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து கொள்ளலாம்.