பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜன.20) காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்தது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடப் படையெடுத்துச் சென்றனர்.
தற்போது விடுமுறை முடிவடையவுள்ள நிலையில், பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கழித்த பொதுமக்கள் மீண்டும் சென்னையில் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் சென்னையில் நோக்கி வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புண்டு.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜன.20) காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.