புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, கந்த சஷ்டி ஆகிய திருநாட்கள் வரவிருப்பதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து கமிஷனர் ஸ்ரீதரன் உத்தரவு.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள், கொடை விழாக்கள், முக்கிய பண்டிகை நாட்கள் போன்றவற்றின் போது திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் மனம் மகிழும் வண்ணம் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மிகக் கலைநிகழ்ச்சிகளை, கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள், அரசு இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளில் பயிற்சி பெற்ற கலைஞர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு நடத்திட வேண்டும் என திருக்கோயில் நிருவாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கலை பண்பாட்டு துறையின் மூலம் பரிந்துரைக்கப்படும் கலைஞர்களுக்கு திருக்கோயில் நிருவாகத்தால் வழங்கப்பட வேண்டிய சன்மானம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சன்மானம் இயன்ற வரையில் உபயதாரர்கள் மூலமும், உபயதாரர்கள் இல்லாத நிலையில் திருக்கோயில் நிதி மூலமும் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான புரட்டாசி சனிக்கிழமைகள். நவராத்திரி, கந்த சஷ்டி ஆகிய திருநாட்கள் வரவிருப்பதால், பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் மேற்குறிப்பிட்டுள்ள விசேஷ நாட்களில் திருக்கோயில்களில் ஆன்மிக இசை / கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்த வேண்டும். ஆன்மிக இசை / கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்துவதற்கு உகந்த நாட்கள் விவரத்தினை, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோயில்களுக்கும் சேர்த்து விவரங்களை பெற்று தொகுத்து ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.