ஒடிசாவில் படகு ஒன்றில் இருந்து சிறிய கேமரா மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிக்கப்பட்டது..
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள், படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட உளவுப்புறா ஒன்றை கண்டனர்.. இதை தொடர்ந்து அவர்கள் அந்த புறாவை கடற்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அந்த புறாவின் இறக்கைகளில் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாசகமும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பறவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காவல் உதவி கண்காணிப்பாளர் நிமாய் சரண் சேத்தி இதுகுறித்து பேசிய போது “ புறாவை யார் அனுப்பியது.. அது எப்படி படகில் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.. சைபர் நிபுணரிடம் புறாவை ஒப்படைத்து ஆய்வு செய்ய உள்ளோம்..” என்று தெரிவித்தார்..
ஜகத்சிங்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் கூறுகையில், ” புறாவின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களை ஆய்வு செய்ய மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியையும் நாடுவோம்.. மேலும் அதன் இறக்கைகளில் எழுதப்பட்டதைக் கண்டறிய நிபுணர்களின் உதவியும் கோரப்படும்,” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், கடற்கரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிட்டபோது, படகில் புறா கண்டுபிடிக்கப்பட்டதாக படகின் ஊழியர் பிதாம்பர் பெஹரா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “திடீரென்று பறவையின் கால்களில் சில கருவிகள் இணைக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். அதன் இறக்கைகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்டேன். அது ஒடியா மொழி இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது” என்று கூறினார்.