இலங்கயில் மீண்டும் அவசர நிலையை அறிவித்து தற்காலிக அதிபர் ரணில் விக்ரம சிங்க உத்தரவிட்டுள்ளார்..
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோட்டபய முதலில் மாலத்தீவுக்கு சென்றார்.. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் சிங்கப்பூர் சென்றார்.. எனினும் சிங்கப்பூர் அரசாங்கம் அவர் “தனிப்பட்ட பயணம்” மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.. அவர் புகலிடம் கேட்கவில்லை, அவருக்கு எந்த தஞ்சமும் வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசுஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சிங்கப்பூரில் உள்ள கோட்டபய, அங்கிருக்கும் இலங்கை தூதரகம் வழியாக தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதை அடுத்து, அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..
இந்நிலையில் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருவதால், மீண்டும் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சமூக அமைதியின்மையைத் தணிக்கவும், ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் “பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..