ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2023-ம் ஆண்டு முதல், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதுமே, இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகி எனப்படும் கேழ்வரகை வெளிமாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளுக்கு முதல், இரண்டாம் வெள்ளிகளிலும் மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை என்று இருப்பதை மாற்றி ஒரே கிழமையில் விடுமுறை அளிப்பது குறித்து பணியாளர்கள் சங்கங்களிடம் பேசி முடிவெடுக்கப்படும். பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரைக்கு தட்டுப்பாடே கிடையாது. நியாயவிலைக் கடைகளில் அடையாளம் அறிய விரல் ரேகை மட்டுமல்லாது வருங்காலங்களில் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் தேர்தலுக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 20.44 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 380 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதை மேம்படுத்தும் விதமாக 12 ஆப்ரேஷனல் குடோன்கள் ரூ.34 கோடி மதிப்பிலும், இதர கிடங்குகள் ரூ.32 கோடி மதிப்பிலும், பாதிப்படைந்த கிடங்குகள் ரூ.95 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.