சென்னை மாநகராட்சியில் கடந்த 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னையில் தான் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். மிக மிக குறுகிய பகுதியில் லட்சக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. மக்கள் நெருக்கமும் மிக மிக அதிகமாக உள்ளது. இதனால், சென்னை மாநகராட்சிக்கு பிரதான வருவாய் ஆதாரமாக சொத்து வரி இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குள் மட்டும் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் இருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருவாய் ஆதாரத்தை வைத்தே சென்னையில் சாலைகள் பராமரிப்பு, நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 9 லட்சம் பேர் வரை முறையாக வரியை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தி விடுகிறார்கள். ஆனால், சுமார் 3.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்துவரி செலுத்துவது இல்லையாம். சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாம்.
இதனால் இவர்களிடம் சொத்து வரி வசூலிக்க அதிரடி திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி, 2022 -23ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
இதேபோல் புதிய சட்ட விதிகளின் படி, பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டடங்கள், நிலங்கள் ஜப்தி செய்ய முடியும். எனவே, 4 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்கள் விவரங்களை சென்னை மாநகராட்சி சேகரித்து வருகிறது. அவர்களது கட்டடம் மற்றும் நிலம் ஆகியவை ‘ஜப்தி’ செய்யப்பட்டு, பொது ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்துக்கு பின், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை எடுத்துக்கொண்டு, மீத தொகை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இது ஒருபுறம் எனில் சொத்து வரி குறைவாக கணக்கிடப்பட்ட 3 லட்சம் சொத்து உரிமையார்களின் சொத்துகள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அவர்களிடம் முறையான சொத்து வரி வசூலிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, சொத்துவரியை முறையாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.