2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய காதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு என்ணிக்கை 117 நாட்களுக்குப் பிறகு 600க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. மேலும் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,197ஆக உள்ளது..
இந்தியாவில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் XBB.1.16 துணை மாறுபாட்டின் பரவல் அதிகரித்துள்ளது.. சமீபத்தில் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய இந்தியப் பயணிகளின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது.. அதில் பெரும்பாலும், ஒமிக்ரானின் XBB.1.16 வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. எனவே, இந்த துணை மாறுபாடு காரணமாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரக்கூடும் என்றும், XBB.1.16 இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினராரும், தொற்று நோய் நிபுணருமான, டாக்டர் சஞ்சய் பூஜாரி கூறுகையில், மற்ற ஒமிக்ரான் துணையுடன் ஒப்பிடும்போது XBB.1.16 மாறுபாடு குறித்து இன்னும் போதிய தரவுகள் கிடைக்கவில்லை.. இந்த மாறுபாட்டின் நோயெதிர்ப்பு சக்தியின் பண்புகள் மற்றும் கடுமையான நோயை ஏற்படுத்தும் திறன் குறித்து இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்..