மதுரை அருகே ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர் (32) என்பவருக்கு திருமணமாகி 4 மாத கைக் குழந்தை உள்ளது. இவர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். விடுமுறை கிடைக்கும்போது குடும்பத்தை பார்க்க கேரளா செல்வார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 12 மணிக்கு அவருக்கு பணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், செங்கோட்டை – ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, அந்த ரயிலில் ஏற முயன்ற அனுசேகர், திடீரென கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அனுசேகர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுசேகரின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேஷன் மாஸ்டர், அதே ரயில் நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.