தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த உணவு தானியங்களின் கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீஃப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை நல்ல அளவில் பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.