மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் மிகப்பெரிய ஜாதி கலவரம் நடைபெற்று வருகிறது. மூன்று மாத காலமாக இந்த கலவரம் நடைபெற்று வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.
அதோடு அந்த மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இது குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்ததோடு, வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான், மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன், இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரையில் 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு செயலிழந்திருக்கிறது. மணிப்பூர் மாநில காவல் துறையினர் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்திருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது. கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வாக்குமூலம் கூட பெறவில்லை என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி.
அதேபோல மணிப்பூர் மாநில டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார். ஆதரவு கேட்ட பெண்களை வன்முறையாளர்களிடம் காவலர்கள் ஒப்படைத்தது தொடர்பாக விசாரணை நடத்தினாரா? என்று சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறார் சந்திர சூட்.
ஒட்டுமொத்தமாக உள்ள 6500 வழக்குகளில் 50 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகளின் நிலை என்னவாக இருக்கிறது. மணிப்பூர் மாநில காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என எப்படி நம்பிக்கையுடன் இருக்க முடியும்? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன் வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் வரும் 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது