மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜாதி கலவரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி வருகிறது. அந்த கலவரத்தின் காரணமாக, பல்வேறு சமூக சீர்கேடுகள் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளும் காவல்துறையினருமே அந்த கலவரத்தை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். அந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ விவகாரம் வெளியானதால் அந்த வீடியோவை வைத்து 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அந்த மாநிலத்தின் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த மத்திய மற்றும் மாநில அரசு பரிந்துரை செய்தது. அதே சமயம் சிபிஐ விசாரணை மாநிலத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு முறையிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான், மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் ஜே பி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பன்சுரி சுவராஜ் மணிப்பூர் மட்டுமல்லாமல் சத்தீஸ்கர், மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக கூறினார். அதோடு, மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது 40 முதல் 50 பேர் பெண் வேட்பாளரின் ஆடைகளை கலைந்து அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும், அது தொடர்பாக இதுவரையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுடன் மணிப்பூரில் நடைபெற்ற 2 பெண்கள் குறித்த பாலியல் வன்கொடுமையை ஒப்பிட்டு பார்த்து நியாயப்படுத்த விரும்பவில்லை என்று கூறி இருந்தனர்.
அத்துடன் அந்த மாநிலத்தில் இயற்கைக்கு எதிரான முறையில் இன மற்றும் மத கலவரங்களுக்கு அப்பாற்பட்ட முன்பு எப்போதும் இல்லாத விதத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளை கையாண்டு வருவதாக தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேரி வருவதாகவும், அது சமூக எதார்த்தத்தின் அங்கமாக மாறிவிட்டதாகவும் நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரை போல நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது என்பதற்காகவும், பெண்களுக்கு எதிரான பல குற்றங்களையும் மன்னிக்க இயலாது எனவும் மணிப்பூர் மாநில விவகாரத்தை எப்படி கையாள்வது? நீதிமன்றத்திற்கு உதவி புரிவது? அல்லது விசாரணையின் கட்டமைப்பை வகுத்துக் கொள்வது என்பதுதான் தற்போது உள்ள கேள்வி என்று நீதிபதி கூறியுள்ளார்.