வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவர் தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விசாரித்தனர்.
தான் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்றும் பெங்களூர் மாநகர போலீஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் ரன்யா தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடைமைக்கு நடுவே தங்கக்கட்டிகள் இருப்பதும் தெரியவந்தது.
அப்போது நிகழ்த்தப்பட்ட விசாரணையில் ரன்யா ராவ், கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு சென்று திரும்பியது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்த 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நேற்றைய தினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.