கன்னியாகுமரி, அவிநாசி உட்பட ஏழு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, பெருந்துறை மற்றும் அவிநாசி ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சி மன்றங்களாக அமைத்துருவாக்கலாம் என்ற அரசின் உத்தேச முடிவு குறித்து ஆணைகள் வெளியிடப்பட்டன. இவ்வறிவிக்கை 31.12.2024ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பிதழில் வெளியிடப்பட்ட இவ்வேழு பேரூராட்சிகளை நகராட்சி மன்றங்களாக அமைத்துருவாக்கலாம் என்ற அரசின் உத்தேச முடிவு குறித்தான அறிவிக்கைக்கு, பொதுமக்களிடமிருந்து பெருந்துறை மற்றும் கோத்தகிரி பேரூராட்சிகளை நகர்மன்றமாக அமைத்துருவாக்குவதற்கு கீழ்கண்ட ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன:-
பெருந்துறை நகரம் (ஊர்) என்பது பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் இரண்டு பேரூராட்சிகளும் இணைந்த பகுதியாகும். பெருந்துறை நடுவே செல்லும் பிரதான சாலையின் ஒருபுறம் பெருந்துறை மறுபுறம் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளாகும். ஆகவே இதனை ஒன்றாக இணைத்து நகராட்சியாக உருவாக்குவது மிகவும் அவசியம் ஆகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.