சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 இன் 14வது ஆட்டத்தில் டிங் லிரனை வீழ்த்தி, செஸ் வரலாற்றில் இளைய உலக சாம்பியனாக தமிழக வீரர் டி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். 18 வயதில், குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இளைஞர் ஆவார்.
இவரின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவியுள்ளது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “நமது சொந்த தெலுங்கு பையன் குகேஷுக்கு வாழ்த்துக்கள். 18 வயதில் உலகின் செஸ் சாம்பியனாக சிங்கப்பூரில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். குகேஷ், உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்!” என்று பாராட்டியிருந்தார்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குகேஷை ஒரு தெலுங்கு பையன் என மொழிரீதியாக அடையாளப்படுத்தி உரிமைக் கொண்டாடியது பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாய் வெடித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் “குகேஷ் ஒரு தமிழர். தமிழ்நாட்டின் செஸ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மட்டுமே அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. வேறு எந்த மாநிலமும் அவரது வெற்றியை கடன் வாங்க முடியாது. எல்லைகளைக் கடந்து குகேஷ் ஒரு இந்தியர். அப்படிப்பட்டவரின் பூர்வீகம் மற்றும் சாதியைக் கண்டறிவது வேடிக்கையானது.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், ”குகேஷ் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடாக இருந்தாலும், அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். எனவே குகேஷ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தெலுங்கர்” என பதிவிட்டுள்ளார். இதனிடையே, ”தமிழரோ அல்லது தெலுங்கரோ, அவர் இந்தியாவிற்கு பதக்கம் வென்றார் என்பதை கொண்டாடுங்கள்” என மற்றொரு பயனர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Read more ; குளிர்காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம்.. ஆனா இதை ஃபாலோ பண்ணா ஈஸியா குறைக்கலாம்..