இந்தி திணிப்பால் தமிழ் அழியாது. ஆனால் தமிழர் பண்பாடு அழியும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியை ஏற்றுக் கொண்டதால் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பூர்வீக மொழிகள் சிதைந்துள்ளது. ஆதிக்கத்தை உணராமல் போனவர்களின் தாய்மொழிகள் இந்தி மொழியால் கரைந்து காணாமல் போயின.
இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சம்ஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. ஆனால், தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்துள்ளது. வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும். மொழியை அழிப்பதே மத்திய பாஜக அரசின் கொள்கை. இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் தமிழை அழிக்க முடியாது.
திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வாலும், தொடர்ச்சியான போராட்டங்களாலும் நம் தாய் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மும்மொழி திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால், பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்