தென் கொரிய பெண் மீது காதல் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் இந்து முறைப்படி தனது சொந்த ஊரான திருப்பத்தூரிலேயே திருமணம் செய்து கொண்டார்.
திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (33) வெள்ளக்குட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கோவையில் தனியார் ஏரோனாடிகல் எஞ்சினியர் படிப்பை படித்து முடித்தார். பின்னர் தென் கொரியாவில் மேற்படிப்பிற்காக சென்றார். அங்கு பி.எச்.டி. படிப்பை முடித்த அவர் தென்கொரியாவிலேயே வேலை கிடைத்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த சூக்வான்முன் (30 ) என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் தமிழர் முறைப்படி திருமணம் செய்ய எண்ணினர்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் , கடந்த வாரம் இந்தியா வந்தனர். திருப்பத்தூர் அருகே கிரிசமுத்திரம் என்ற இடத்தில் ஒரு திருமண மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க , பெண்ணின் பெற்றோர்,உறவினர்கள், மாப்பிள்ளையின் பெற்றோர் , உறவினர்கள் படை சூழ இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்கள்.