டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்று குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை நேரத்தை மாற்றி அமைத்தார். தற்போது அதுவே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான், தமிழகத்தின் டாஸ்மாக் விற்பனை நேரத்தை 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் என்று குறைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மது பிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 21 வயதிற்கு உட்பட்ட இளம் தலைமுறையினர், இந்த மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆகவே இந்த மது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மெல்ல, மெல்ல சீரழித்து வருகிறது. என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுவிற்பதை தடை செய்யும் விதத்தில், மது வாங்குவதற்கு சரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மதுவுக்கு அடிமையான நபர்களை தடுப்பதற்காக, டாஸ்மாக் விற்பனை நேரத்தை கட்டுப்படுத்தலாம். அதோடு, மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே, மது வழங்க வேண்டும் எனவும், மது விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணி என்பதை மாற்றி, இரண்டு மணி முதல் இரவு 8 மணி வரையில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைகளை வழங்கி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, நீதிமன்றம் டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தை பற்றி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அது பற்றி ஆலோசனை செய்த பின்னர்தான் நாங்கள் முடிவெடுக்க முடியும். இதுவரையில் வாய்மொழியாகவே எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் எங்களை வந்து அடையவில்லை. நீதிமன்றம் சொல்கிறது என்றால், அதை நாங்கள் அமல்படுத்தி தான் ஆக வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த பேச்சால், மது விற்பனை செய்யப்படும் நேரம் குறைக்கப்படுமா? என்று கேள்விகளும் மது பிரியர்களின் இடையே எழுந்திருக்கிறது.