அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2-ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், சேவை வழங்குதல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மொபைல் வாயிலாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள். பாலூட்டும் தாய்மார்களுக்கு முழுமையான ஊட்டச்சத்து உணவு வழங்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம்(போஷன் அபியான்) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. மேலும் இதனை மேம்படுத்தும் வகையில் 2-வது கட்ட ஊட்டச்சத்து இயக்கம்(போஷன் 2.0)தொடங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து இயக்க பணியாளர்கள் மற்றும் வளர் இளம் பருவ பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய சாக்சம் அங்கன்வாடி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில், வழங்கப்படும் சேவைகளைக் கண்காணிக்கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் தொழிநுட்பத்துடன் கூடிய மொபைல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து தொடர்பான செயல்பாடுகளை ஆன்லைன் வாயிலாக கண்காணிக்கும் வகையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேவையான கல்வி அறிவு, திறன் மேம்பாடு போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சாவித்திரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.