பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது எம்.பி. பதவியில் தொடர்வதால், இந்த வழக்கு கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றது அல்ல என இம்ரான்கான் தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறி தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
இன்று விசாரணை முடிந்து வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது எனவும், இன்றைய தினமே அவர் இஸ்லாமாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பெற்றதால் பாகிஸ்தான் எம்பி பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.